கொரோனா ஒரு தொற்று நோய்.. அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு..
தகவல் சொல்லாமல் சிகிச்சையளிக்க கூடாது சென்னை: கொரோனாவை தொற்றுநோயாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் பலருக்கும், கொரோனா நோய் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால், அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையை, தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவைத்தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருவது அறிந்ததே. இது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், கொரோனோ வைரஸ், தமிழக பொது சுகாதார சட்டம் 1939ன் கீழ் அறிவிக்கப்பட்ட நோய் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்க்கு எங்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், தமிழக சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அரசிதழில் கூறப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்காத மருத்துவர்கள் மற்றும் லேப்கள் மீது இதன்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.